இந்திய அறிவியல் துறையில், ஒரு லெஸ்பியன் திருநங்கையாக இருத்தல்

“என்னுடைய மாற்றத்தின்போதும், மாற்றத்துக்குப்பிறகும், கல்வித்துறை உலகத்தில் நான் மிகுந்த பாரபட்சத்தையும் சகிப்புத்தன்மையின்மையையும் சந்தித்தது உறுதி” என்கிறார் கணக்கியல் வல்லுனரான ஏ. மணி.
By | Published on Aug 20, 2021
எழுதியவர்: ஏ. மணி

நான், “Rough Sets” எனப்படும் கணினிக் கோட்பாட்டில் முன்னணி ஆய்வாளர். பன்னாட்டு Rough Set கழகத்தின் மூத்த, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுள் ஒருவர். கல்வித்துறையில் இருக்கும் மிகச்சில லெஸ்பியன் திருநங்கைகளில் ஒருவர். (நான் என்னை ஒரு பெண்ணாக அடையாளம் காண்கிறேன்; என்னுடைய பிரதிபெயர்கள், ஆங்கிலத்தில் She/hers/her, தமிழில் அவள்) என்னுடைய ஆய்வுப் பகுதிகள், இயற்கணிதம், தர்க்கம், Rough Sets, தெளிவின்மை மற்றும் அதுதொடர்பான பகுதிகளுக்கான முறையான அணுகுமுறைகள். சிறிதுகாலத்துக்கு முன்புவரை, நான் கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் பணியாற்றிவந்தேன். ஆனால், என்னுடைய பணிவாழ்க்கை மிகவும் வேறுபட்டதாக இருந்துவந்துள்ளது (ஏ மணி, 2019அ) — இதன் அம்சங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரையில், ஓர் LTQ பெண் என்றமுறையில் என்னுடைய அனுபவங்களின் பின்னணியில், அறிவியல் துறையில் உள்ள பெண்கள் தங்களுடைய மன நலன் சார்ந்து சந்திக்கக்கூடிய சில பிரச்சனைகளை விவரிக்கவுள்ளேன்.

(Editors Note) பதிப்பாசிரியர் குறிப்பு: இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களுக்கான விளக்கங்களை அறிய விரும்பும் வாசகர்கள் இந்தத் தகவல் கட்டுரையை வாசிக்குமாறு ஆலோசனை வழங்குகிறோம்.

‘நான் நன்றாகச் சாப்பிட்டேன்’ என்றோ, ‘நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்றோ, ‘ஒரு கார் மிக விரைவாகச் செல்கிறது’ என்றோ ஒருவர் சொன்னால், அவர் பல விஷயங்களைப்பற்றித் தெளிவற்றுப் பேசுகிறார்.

இப்படிப்பட்ட தெளிவற்ற சொற்றொடர்கள் உண்மையான வாழ்க்கைச் சூழலை முழுமையானமுறையில் போதுமான அளவு விவரிக்கலாம் அல்லது விவரிக்காமலும் இருக்கலாம். உண்மையில், இத்தெளிவின்மை என்பது (நிச்சயமின்மையைப் போலின்றி) மனித மொழிகளின் பெரும்பாலான வெளிப்பாடுகளில் எப்போதும் உள்ளது.

தெளிவின்மையின் முறையான அணுகுமுறைகள், அடிப்படையில் கணிதம் சார்ந்தவை. நவீனக் கணிதம் என்பது வெறுமனே எண்களைப்பற்றியதுமட்டுமில்லை: அது இன்னும் சிக்கலான கருத்துகளைப்பற்றியது. பல துறைகளின் அடிப்படைகளை அமைக்கும் மிகப் பரவசம் தரும் ஆராய்ச்சிப் பிரிவுகளில் ஒன்று தெளிவின்மை.

ஒன்பது வயதுக்கு முந்தைய என்னுடைய வாழ்க்கையைப்பற்றி எனக்கு ஒரு தெளிவற்ற நினைவுமட்டுமே இருக்கிறது என்றாலும், நான் பாலினத்தின் அம்சங்களை அப்போது புரிந்துகொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஆறு வயது. நான் ஒரு பெண் என்பதை நான் அப்போதுதான் உணர்ந்தேன். அழகு, பெண்மைபற்றிய என்னுடைய சிந்தனைகள் மிக இளவயதிலேயே உருவாகத்தொடங்கிவிட்டதை இது குறிக்கிறது. இவை எப்போதும் வழக்கத்துக்கு மாறானவையாகத்தான் இருந்துவந்தன. நடுநிலைப்பள்ளியில் என்னுடைய அறிவியல் ஆசிரியையைப் போல வலுவான, கடினமாக உழைக்கிற பெண்கள்தான் என்னுடைய லட்சிய பிம்பங்களாக இருந்தார்கள். ஒருவர் குறைந்தபட்ச ஒப்பனையுடன் அழகாக இருக்கலாம் என்பதையும், அழகு என்பது உடல்சார்ந்த அசைவிலும் இருக்கிறது என்பதையும் நான் கற்றுக்கொண்டேன். ஆனால், பிறருடன் எளிதில் கலந்து பழகும் தன்மை எனக்கு எப்போதும் இல்லை. (நான் ஓர் Introvert). ஆகவே, பாலினத்தைப்பற்றி மற்றவர்களிடம் பேசவேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.

நான் எப்போதும் கல்வியில் அதிகக் கவனம் செலுத்திவந்தேன்; மிகுந்த கற்பனைத்திறனுடன் வளர்ந்தேன். ஒன்பது வயதுக்குள், என்னுடைய கல்வித்திறமையைப் பாராட்டும் அட்டைகளை ஏராளமாகச் சேர்த்துவிட்டேன். உடல்ரீதியில், நான் இருபால் கூறுகளையும் இயல்பாகப் பெற்றிருந்தேன். பள்ளி நாட்களில் நான் ஒல்லியாகவும் வலிமையாகவும் இருந்தேன். எனக்குப் பிடித்த விளையாட்டு, கிரிக்கெட். என்னுடைய இருபாலர் பள்ளிகளிலிருந்த மாணவர்களுக்குப் பெரும்பாலும் LGBTQ விஷயங்களைப்பற்றித் தெரிந்திருக்கவில்லை. அதேசமயம், நான் எந்தக் கேலியையோ துன்புறுத்தலையோ சந்திக்கவில்லை. என்னுடைய பள்ளி நாட்களைப்பற்றிய கூடுதல் தகவல்களை இந்த வலைப்பதிவில் வாசிக்கலாம்.

மாற்றத்துக்கான ஒரு பாதை

2000-ம் ஆண்டுக்கு முன்னால், உலகின் பெரும்பாலான பகுதிகளில் இடைநிலையினரைப்பற்றிய விஷயங்கள் (குறிப்பாக, உளவியல் பின்னணியில்) பொதுவாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கவில்லை. இதற்குக் காரணம், ஆணாதிக்க இயங்கியல். மருத்துவரீதியில் மற்றும் சட்டரீதியிலான என்னுடைய முறையான மாற்றம், 2012 முதல் 2014 வரையிலான ஆண்டுகளில் நடைபெற்றது. (நவீனப் பாலினக் கருத்தாக்கத்தின்படி, இடைநிலைப் பெண்கள் என்போர், பிறக்கும்போது பெண்கள்தான், ஆனால், மற்ற பெண்களைப்போலின்றி, இவர்களுடைய உடலில் ஒரு பிரச்சனை உள்ளது. ஆகவே, ‘மருத்துவ மாற்றம்’ என்ற சொல், ஒருவருடைய உடலின் பாலியல் அம்சங்களை முற்றிலும் மாற்றியமைப்பதைக் குறிக்கிறது). இந்தக் காலகட்டத்தில், நான் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் என்னுடைய முனைவர் ஆய்வுப்படிப்பிலும் ஈடுபட்டுவந்தேன். என்னுடைய பள்ளிநாட்களிலிருந்தே நான் மாற விரும்பினேன். ஆனால், ஆதரவு, வசதிகள் இல்லாத நிலை அதற்கு ஒரு தடையாக இருந்தது. உண்மையில், ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின்போது, ஒரு குறிப்பிட்ட மனநல மருத்துவர் (இந்தியாவில், அப்போதும் இப்போதும் மாற்றத்துக்கு மனநல மருத்துவர்களிடம் சான்றிதழ்களைப் பெறுவது அவசியம். இப்போதைய சூழ்நிலை, உள்ளடக்குகிற 2014 NALSA தீர்ப்புக்குப் பதிலாக,  பிழையான 2019 இடைநிலையினர் சட்டத்தைப் பின்பற்றுவதால் நிகழ்கிறது) இதுபற்றியத் தான் ஏற்கெனவே தீர்மானித்துவைத்திருந்த கருத்துகளால் எனக்கு உதவ மறுத்துவிட்டார். என்னுடைய பெற்றோர் என்று சொல்லப்பட்டவர்களும் என்னுடைய திட்டத்தை எதிர்த்தார்கள். காரணம், அவர்களுடைய மதம் சார்ந்த சகிப்புத்தன்மையின்மை.

மனநலத்தில் என் பயணம்

மாறுவதற்குமுன்னால், நான் எப்போதும் தனிமையில் இருந்தேன், விலகியிருந்தேன். அப்போது நான் அடிக்கடி மனச்சோர்வு, பதற்றத்தால் அவதிப்பட்டேன், அவ்வப்போது மிகவும் வலுவான தற்கொலை எண்ணங்களைக் கொண்டிருந்தேன், ஏனெனில், இதிலிருந்து தப்பிப்பதற்கான உண்மையான வழிகள் எவையும் அப்போது இல்லை.

இவை அனைத்தும், என்னுடைய படிப்பை, மதிப்பெண்களைப் பாதித்தன. குறைந்தபட்சம், என்னால் தொடர்ந்து நல்ல மதிப்பெண்களை வாங்கமுடியவில்லை, நன்கு படிக்கமுடியவில்லை.

இதுதொடர்பான ஆலோசனை வசதிகள் பள்ளியிலோ கல்லூரியிலோ வேறெங்குமோ அப்போது இல்லை. இருந்தபோதும், நான் ஆண், பெண் அல்லாதார் இடைநிலை இனத்தவரில் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய பிரச்சனைகளில் ஏற்படும் முன்னேற்றங்களைப்பற்றிச் சஞ்சிகைகள், பத்திரிகைகளின் மூலம் தொடர்ந்து தெரிந்துகொண்டிருந்தேன்.

நான் சந்தித்த அறிகுறிகளில் சில, (முந்தைய பகுதியில் உள்ளவற்றைப்போல்) பாலின அமைதியின்மையின் எடுத்துக்காட்டுகளாகும். எளிய சொற்களில் சொல்வதென்றால், (பாலின அடையாளம் மற்றும் வெளிப்பாடு தொடர்பான) ஒருவருடைய சுய உணர்வுக்கும், அவருடைய உடலின் உள் மற்றும் வெளிப் பகுதிகளுக்கும் இடையிலான பொருந்தாத உணர்வை இது குறிப்பிடுகிறது. இதை ஒருவருடைய உடல் பண்புகளுடன் ஒப்பிட்டுச் சொல்லலாம், அல்லது, பிறருடைய உடல்களை அவர் எப்படிக் காண்கிறார் என்பதை வைத்துச் சொல்லலாம், அல்லது, ஒருவருடைய மன நலன் அல்லது சமூக ஊடாடலுடன் ஒப்பிட்டுச் சொல்லலாம். அப்படிப்பட்ட அறிகுறிகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள்:

  • ஆண்களுக்கான இரண்டாம்நிலைப் பண்புகளில் பெரும்பாலானவை இவர்களுக்குப் பிடிக்காது; அவற்றைச் சந்திக்கும்போது வசதியற்று உணர்வார்கள்; கிட்டத்தட்ட ஆண்களையே வெறுக்கும் நிலைக்கு வந்துவிடுவார்கள்
  • பூப்பெய்தலிலிருந்து தன்னுடைய உடல் சிதைவதுபோன்ற உணர்வைக் கொண்டிருப்பார்கள்
  • ஆண்களுக்கான இரண்டாம்நிலைப் பண்புகளை நீக்க இயலவில்லையே என்பதால் மனச்சோர்வு ஏற்படும்
  • டெஸ்டாஸ்ட்ரோன் நஞ்சாவதுபோன்ற தனித்துவமான ஓர் உணர்வு உண்டாகும்
  • காலம் செல்லச்செல்ல, அவர் தன்னை ஆணாக முன்வைப்பது வற்புறுத்தப்படுவதால், மனிதத்தன்மையற்ற ஒரு சமூகத்துடன் ஊடாடுகிறோம் என்கிற ஒரு வலுவான உணர்வு ஏற்படும்
  • ஏற்கெனவே உள்ள அம்சங்களில் பெண்மைத்தன்மை இல்லாததால் மனச்சோர்வு மற்றும் பொதுவான மனச்சோர்வு ஏற்படும்.

பெரும்பாலான திருநங்கையர், அல்லது எல்லாத் திருநங்கையரும், வெவ்வேறு அளவுகளில் பாலின அமைதியின்மையை அனுபவிக்கிறார்கள். பாலின அமைதியின்மையைப்பற்றிய கூடுதல் தகவல்களை என்னுடைய 2014 கட்டுரையில் காணலாம். கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ள முப்பது அறிகுறிகளின் உட்தொகுப்புகள், திருநங்கையரில் பாலின அமைதியின்மையைக் காட்டுகின்றன. இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த முப்பது அறிகுறிகளில் கிட்டத்தட்ட பதினாறு அறிகுறிகளை (மேலே குறிப்பிடப்பட்டிருப்பவை உள்பட) நான் அனுபவித்தேன்; என்னுடைய உடல் ‘போதுமான அளவு சிதைந்துவிட்டது’ என்று ஒரு நிகழ்வு நிகழ்ந்ததால், மனம் உடைந்து தற்கொலை செய்துகொள்ளலாம் என்று தீர்மானித்துவிட்டேன். இத்துடன் தொடர்புடைய ஓர் ஆய்வுக்கட்டுரையில் (ஆம், பாலின ஆய்வுகளில் நான் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளேன்), திருநங்கையரில் பாலின அமைதியின்மை ஒரு குறிப்பிட்ட அளவு தனிமையைக் கண்டிப்பாக உருவாக்கும் என்று நான் வாதிட்டுள்ளேன்.

உண்மையில், பாலின அமைதியின்மையின் இன்னொரு பொதுவான அறிகுறியையும் நான் அனுபவித்துள்ளேன்: எதிர்த்தன்மயமாக்கல் (depersonalisation).

எதிர்த்தன்மயமாக்கல் என்றால் என்ன?

ஒருவர் தன்னையோ உலகையோ உண்மையற்றதாக எண்ணுகிற சில குறிப்பிட்ட உணர்வுகள், அனுபவங்களை இது குறிப்பிடுகிறது.

எதிர்த்தன்மயமாக்கல் என்பது, எதார்த்தம் பற்றிய என்னுடைய பார்வையை மாற்றவில்லை. ஆனால், வெளி உலகிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு விலகச்செய்தது, என் உணர்வுகளை மரத்துப்போகச்செய்தது.

உண்மையில், எதிர்த்தன்மயமாக்கலை அனுபவிக்கிற மக்கள், தங்களை வரவேற்காத அல்லது தங்களிடம் பகைமை பாராட்டுகிற சூழ்நிலைகளில் மேலும் விலகிச்செல்லும் சாத்தியங்கள் உண்டு. இது தெரிந்த விஷயம்தான். என்னுடைய அனுபவங்களும் இப்படியே அமைந்ததாக நான் நினைக்கிறேன்.

2012ம் ஆண்டு, ஆய்வுப் பணிவாழ்க்கைக் கோணத்தில் எனக்கு ஒரு வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது. அதே நேரம், எனக்கு வேறு எந்த உண்மையான தெரிவும் இல்லாததால், விரக்தியில் நான் மாறத் தீர்மானித்தேன். உண்மையில், நீண்ட நாள் பாலின அமைதியின்மையின் தாக்கங்களால், என்னுடைய மாற்றம் வெற்றிகரமாக அமையுமா என்பதே எனக்கு உறுதியாகத் தெரிந்திருக்கவில்லை.

நான் மாறுவதற்கு முந்தைய காலகட்டத்தில் நான் செய்த, பதிப்பிக்கப்படாத கணித ஆராய்ச்சிகளில் குறிப்பிடத்தக்க அளவு, முதன்மையான ஆராய்ச்சியுடன் நன்கு இணைந்திருக்காது. என்னுடைய பணியின் இந்தப் பாகுதி, என்னுடைய கணித முன்னேற்றத்தில் எதிர்த்தன்மயமாக்கலுடைய தாக்கத்தையும் சிறப்பாகக் குறிப்பிடுகிறது.

கல்கத்தா பல்கலைக்கழகத்தில் என்னுடைய B.Scயை நிறைவுசெய்தவுடன், நான் ஆராய்ச்சி-நிலைக் கணக்கில் ஈடுபட்டுவந்தேன். ISI கொல்கத்தாவில் புள்ளியியலில் ஒரு முதுநிலைப் பட்டப்படிப்பு வகுப்பிலும் சேர்ந்திருந்தேன். இதைத் தொடர்ந்து, தூய கணக்கில் M.Sc பட்டம் பெறுவதற்கு, 2011ல் CSIR-NETக்குத் தகுதிபெறுவதற்கு மிக முன்பாகவே நான் உயர்ந்த நிலைச் சஞ்சிகைகளில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பதிப்பித்தேன்.

தொடக்கத்தில், கணக்கில் என்னுடைய ஆராய்ச்சி ஆர்வங்கள் ஆய்வு, பகுதியளவுக் குழுக்கள் மற்றும் பகுதியளவு இயற்கணிதம் ஆகியவற்றுடன் நின்றுபோயிருந்தன. என்னுடைய M.Scக்கு முன்பாக, நான் எந்தக் கல்வி அமைப்புடனும் முறையாகத் தொடர்புகொண்டிருக்கவில்லை, நான் சுதந்தரமாகப் பணியாற்றிவந்தேன். இதனால், ஆராய்ச்சி-நிலைக் கணக்கில் (மற்றும் தத்துவவியலில்) ஒரு பின்னணியைக் கட்டமைப்பதற்காக நான் குறிப்பிடத்தக்க அளவு அதிக நேரம் செலவழிக்கவேண்டியிருந்தது.

இந்த நேரத்தில், நான் ஒரு பகுதி நேர ஆசிரியராகவும் இருந்தேன்; துணைப் பகுதிகளில் ஆய்வுக் குழுக்களில் இணையும் வாய்ப்பும் எனக்கு இருந்தது. ஆனால், அது எனக்கு ஆர்வமூட்டவில்லை.

காலப்போக்கில், என்னுடைய ஆராய்ச்சி ஆர்வங்கள் இயற்கணிதம், Rough Sets, தெளிவின்மை மற்றும் தர்க்கத்தின்பக்கம் திரும்பின. மாற்றத்துக்கு முன்பும், மாற்றத்தின்போதும், அதன்பிறகும் இந்தத் துறைகளில் நான் நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பதிப்பித்துள்ளேன். என்னுடைய ஆராய்ச்சிச் செயல்திறனானது, என்னுடைய மாற்றத்தின்போதும் அதன்பிறகும் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக இருந்ததைக் குறிப்பிடவேண்டும்.

மாற்றத்துக்கு முந்தைய என்னுடைய வாழ்க்கையில் இருந்த விலக்கப்படுதலும் தனிமைப்படுத்தப்படுதலும், ஆராய்ச்சிக்காக நான் பிறருடன் இணைந்து செயல்படுவதன் இயல்பை நிச்சயம் பாதித்தன. ஆராய்ச்சியின்போது இணைந்து செயல்படுதல் என்பது பல வடிவங்களில் அமையலாம்: இவைபற்றிய கூடுதல் கருத்துகளை இங்கு காணலாம்: (ஏ மணி, 2019அ).

  • இன்னொருவருடைய ஆராய்ச்சியைக் குறிப்பிடுவது
  • இன்னொருவருடைய ஆராய்ச்சியை மறுக்கும் ஒரு மாற்றுக் கோட்பாட்டில் பணியாற்றுவது
  • இன்னொருவருடன் இணைந்து பணிபுரிந்து ஓர் ஆராய்ச்சிக்கட்டுரையை உருவாக்குவது
  • ஒரு குறிப்பிட்ட கருத்தாக்கத்தை முழுமைசெய்கிற ஒரு மாற்றுக் கருத்தாக்கத்தை உருவாக்குவது
  • பயிற்றுவித்தலுக்கான குறிப்புகளிள் அல்லது விமர்சனங்களிலிருந்து ஆராய்ச்சி யோசனைகளை உருவாக்குவது –

இவற்றை இன்றைய அமைப்பு அடுக்குகளாக ஒழுங்குபடுத்துகிறது. ஆனால், எந்த அடிப்படைகளில் ஒழுங்குபடுத்துகிறது, அந்த அடிப்படைகள் சரியானவையா என்பது கேள்விக்குறிதான்.

இந்த அடுக்குகள் எனக்கு நன்கு பொருந்தவில்லை, குறிப்பாக, மாற்றத்துக்கு முந்தைய நாட்களில். அப்போது நான் இணைந்து எழுதப்பட்ட எந்த ஆராய்ச்சிக் கட்டுரையிலும் பங்கேற்கவில்லை. உண்மையில், 2016ம் ஆண்டுவரை, என்னுடைய ஆராய்ச்சிப் பதிப்புகள் அனைத்தும் என்னால் தனியாக எழுதப்பட்டவை. கடந்த சில ஆண்டுகளில் இது குறிப்பிடத்தக்க அளவு மேம்பட்டுள்ளது என்று இன்றைக்கு நான் சொல்வேன். 2018ல், பொது Rough Setsல் இயற்கணித முறைகள் என்ற தலைப்பைக் கொண்ட ஆராய்ச்சித் தொகுப்பில் கிட்டத்தட்ட பாதியை நான் இணைந்து திருத்தினேன், எழுதினேன்.

கல்வித்துறையில் LQTயாக இருத்தல்

என்னுடைய மாற்றத்தின்போதும், மாற்றத்துக்குப்பிறகும், கல்வித்துறை உலகத்தில் நான் மிகுந்த பாரபட்சத்தையும் சகிப்புத்தன்மையின்மையையும் சந்தித்தது உறுதி. இந்தியக் கல்வித்துறையில் ஒருவர் தனக்கெதிரான பாரபட்சத்தைச் சந்திப்பது ஒரு பிரச்சனை; அது தனக்கு நிகழ்ந்தது என்பதை நிரூபிப்பது இன்னொரு பிரச்சனை.

ஒரு பெண்ணாக மாறியபிறகு, என்னுடைய சட்டப்பூர்வமான அடையாள ஆவணங்களைத் திருத்துவதில் நான் அதிகப் பிரச்சனைகளைச் சந்திக்கவில்லை. பல்கலைக்கழகத்தில்கூட, திருத்தங்கள் எளிதாக நடந்தன; அநேகமாக எல்லாரும் ஆதரவாக நடந்துகொண்டார்கள். பொதுவான இந்தியக் கல்வித்துறையைப் பொறுத்தவரை, என்னுடைய மாற்றத்தின்போதும், மாற்றத்துக்குப்பிறகும் சிலர் (பெரும்பாலும் ஆண்கள்) நிச்சயம் சகிப்புத்தன்மையின்றி நடந்துகொண்டார்கள், பெண்களுக்கெதிரானவர்களாக இருந்தார்கள், இடைநிலையினரைக்கண்டு விலகிச்சென்றார்கள். இதில் ஆர்வமூட்டும் ஒரு விஷயம் என்னவென்றால், அவர்களுடைய பழக்கவழக்கங்கள் அனைத்தும்  அவர்களுடைய ஆணாதிக்கப் பார்வைகள், பிற பெண்களுடன் பழகும் விதத்துடன் பொருந்திப்போயின. இன்னும் சிலர், தகவல்களுக்கேற்பத் தங்களை மாற்றிக்கொள்ள நேரம் எடுத்துக்கொண்டார்கள்; மற்றவர்கள் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். இவற்றை இப்போது தொகுத்துச் சிந்தித்தால், மக்களைக் கையாள்வதில் என்னுடைய பெண்ணியப் புரிந்துகொள்ளல் உதவியது என்று சொல்லவேண்டும்.

பெண்ணியம் (செயல்பாட்டுப் பெண்ணியம்) என்பதை நான் இவற்றின் கலவையாக விவரிப்பேன்: சிறிது கலப்பியல், சிறிது லெஸ்பியன், சிறிது மார்க்ஸிஸம், சிறிது அறிவாளித்தன்மை மற்றும் சிறிது சமூகப் பெண்ணியம். குறிப்பாக, பெண்ணிய எண்ணத்தைப் பயன்படுத்தி நான் விரைவாகத் தீர்மானமெடுக்க முயல்கிறேன். அத்துடன், எதார்த்தப் பின்னணிகளில் குறைந்தபட்சமான, ஆனால், செயல்திறன் மிக்க தகவல்தொடர்புக்கான முறைகளை ஆராய்கிறேன். (இவற்றை நான் மீம்ஸ்மூலம் செய்யக்கூடும், ஏனெனில், இவை பண்பாட்டுப் பரிணாம வளர்ச்சியின் அலகுகளாகும்).

பாரபட்சத்துக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய அனைத்து வியூகங்களையும், அதற்கு வழிவகுக்கக்கூடிய அனைத்து மனப்போக்குகளையும் சிந்தித்துப்பார்த்தால், நீடித்திருக்கும் நுண்ணுணர்வாக்கம்தான் அவற்றுள் மிக முக்கியமானது என்று நான் நம்புகிறேன்.

இந்தியாவின் பல பகுதிகளில் ஒரு வெளிப்படையான லெஸ்பியன் பண்பாடு இல்லை; மக்கள் பொதுவாகச் சகிப்புத்தன்மை அற்றவர்களாக, ஆணாதிக்கவாதிகளாக, ஒருபாலுறவை எதிர்க்கிறவர்களாக இருக்கிறார்கள். பொதுவாக இந்த விஷயத்தில் நகர்ப்புறக் கல்வித்துறைச் சூழல் மேம்பட்டுள்ளது; ஆனால், லெஸ்பியன்கள் தங்களுடைய உறவைப்பற்றி வெளிப்படையாகச் சொல்லாமல் தங்களுக்குள் வைத்துக்கொள்வது வழக்கமாக உள்ளது. நான் (மாற்றத்துக்கு முன்னும் பின்னும்) பல லெஸ்பியன் உறவுகளில் இருந்துள்ளேன்; இவைகூட, உறவை முற்றிலும் ரகசியமாக அல்லது பாதியளவு ரகசியமாக வைத்துக்கொள்ளும் பொதுவான போக்கின் தாக்கத்தைக் கொண்டிருந்தன. இதுபோன்ற சூழல்கள், LTQ பெண்கள் பொதுவாகத் தனிமைப்படுத்தப்படும் நிலைகளுக்கு வழிவகுக்கின்றன; அவர்களுடைய உகந்த செயல்பாட்டு வியூகங்களைத் தீர்மானிப்பதில் ஒரு பங்கை ஆற்றுகின்றன; ஏனெனில், தனிநபர்களுக்கு உரியவை அரசியலால் பாதிக்கப்படுகின்றன.

சில ஆலோசனைகள்

முதன்மையாக மாறுபட்ட-ஆணாதிக்கச் சமூகங்களில், அவர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிற கல்வி அமைப்புகளில் (சிறப்பாக, இந்தியப் பின்னணியில்) LTQ பெண்கள் ஒதுக்கிவைக்கப்படுதல், விலக்கப்படுதல் மற்றும் ‘பிறர்’ என்ற வகையில் சேர்க்கப்படுதல் ஆகியவற்றைச் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, கல்வித்துறை அமைப்புகள் இன்னும் வரவேற்பான மற்றும் உள்ளடக்கிய ஒரு சூழலை உருவாக்குவதற்கும், பாலியல் துன்புறுத்தலைக் கையாளும் பழைமையான செயல்முறைகளை மேம்படுத்துவதற்கும், நேர்விதமான பாரபட்சத்தை (இட ஒதுக்கீடு) வழங்குவதற்கும், இதில் பங்குபெறும் அனைவர்மத்தியிலும் இந்த நுண்ணுணர்வை உருவாக்குவதற்கும் முயல்வது அவசியம்.

என்னுடைய சொந்த அனுபவங்கள், கல்வித்துறையில் வெவ்வேறு நிலைகளில் உள்ள பிற LTQ பெண்களுடனான என்னுடைய உரையாடல்களின் அடிப்படையில், ஓர் உள்ளடக்கிய, பாரபட்சமற்ற சூழலை உருவாக்குவதற்கான சில ஆலோசனைகளை நான் வழங்குகிறேன்.

  • LTQ மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்களை HR கொள்கைகள் (பாலியல் துன்புறுத்தல், கொடுமைப்படுத்தலுக்கு எதிரானவை உள்பட)  அறிந்திருக்கவேண்டும். அவர்களுடைய கவலைகளுக்குப் பதிலளிக்கவேண்டும். எடுத்துக்காட்டாக, இடைநிலைப் பெண்களுக்குத் தங்களுடைய மாற்றத்தின்போது 3 முதல் 6 மாதம் விடுமுறை தேவை; LTQ பெண்கள் தங்களுடைய பிரச்சனைகளை ஆக்கப்பூர்வமாகக் கையாள உதவுகின்ற மன நல வல்லுனர்கள் உயர் கல்வி அமைப்புகளில் இருக்கவேண்டும்.
  • பாலியல் மற்றும் பாலினம்பற்றிய அடிப்படைத் தலைப்புகள் உயர் கல்விப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படலாம். இதன்மூலம், மாணவர்கள் இதுபற்றித் தெரிந்துகொள்வார்கள், தங்களையும் அந்தக் கல்வி நிறுவனத்தில் உள்ள லெஸ்பியன்கள், இடைநிலைப் பெண்கள் அல்லது மாறுபட்ட விழைவு கொண்ட தங்களுடைய சக மாணவர்களையும் நுண்ணுணர்வோடு அணுகுவார்கள்.
  • ஒரு டிஜிட்டல் அல்லது நிஜமான LTQ+ ஆராய்ச்சி மையத்தை உருவாக்கி, பாலியல் மற்றும் பாலினப் பிரச்சனைகளைப்பற்றிய கல்வி ஆவணங்களை அதில் வைக்கவேண்டும். அந்தக் கல்வி நிறுவனத்துக்குள் இருக்கிற, இயங்கிவருகிற மாறுபட்ட விழைவு கொண்டவர்களைப்பற்றிய வாசிப்பு வட்டங்கள், சக மனிதர்களுக்கு ஆதரவளிக்கும் குழுக்களைப்பற்றிய தகவல்கள் இங்கு இருக்கவேண்டும்.
  • கல்வி நிறுவனங்களுக்குள் LTQ+ ஆதரவுக் குழுக்கள் தொடங்கப்பட்டுச் செயல்படுவதை அந்தக் கல்வி நிறுவனங்கள் அனுமதிக்கலாம்; இதற்காக, மாறுபட்ட விழைவு கொண்டவர்களுடன் நட்பான கல்வி நிறுவனப் பங்குதாரர்களை அணுகலாம். இதன்மூலம், கொடுமைப்படுத்துதல், துன்புறுத்துதல், தவறாகப் பயன்படுத்துதல் போன்ற எந்தவிதமான வன்முறை வடிவத்தையும் மிகுந்த நேர்மை, நுண்ணுணர்வுடன் கையாள இயலும்.
  • புதிதாக வருகிறவர்களுக்கு இதுதொடர்பான விஷயங்களைச் சொல்லித்தருவதற்காக, நுண்ணுணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதை, மாறுபட்ட விழைவு கொண்டோருக்கு நட்பான ஆதரவுக் குழுக்கள் உறுதிசெய்யலாம்.
  • இந்தக் கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ள மன நலப் பிரச்சனைகள் சகிப்புத்தன்மையில்லாத, நசுக்குகிற, ஆணாதிக்க மனப்போக்குடன் (இவை ஒரு தீய சுழலின் பகுதிகள்) நெருக்கமாகப் பிணைந்திருப்பதால், இன்னும் அதிக LTQ+ பெண்கள் வெளிப்படையாகத் தங்களைப்பற்றிப் பேசுவதும், தங்கள் உரிமைகளை வலியுறுத்துவதும், தங்களுடைய வாழ்க்கையை வாழ்வதும்கூட முக்கியமாகும். வெளிப்படையாகப் பேசுவது என்றால், அமைப்புரீதியிலான நசுக்கலினால் தாங்கள் சந்திக்கும் மன நலப் பிரச்சனைகளைப்பற்றி அவர்கள் தயங்காமல் சொல்லவேண்டும். ஏனெனில், விழிப்புணர்வானது மாற்றத்தைத் தூண்டும் ஓர் ஆற்றல்மிக்க காரணியாக இருக்கலாம்.
  • நிறைவாக, ஒரு முக்கியமான விஷயம், மாற்றமானது சந்திக்கிற பிரச்சனைகளின் இயல்பைப்பற்றிய பல்வேறு பார்வைக்கோணங்களைப் பொதுமக்களுக்குச் சொல்லித்தரவேண்டும்.

 


ஆசிரியர் குறிப்பு: ஏ மணி, தூய கணித மற்றும் தர்க்க ஆய்வாளர்.

அங்கீகாரங்கள்: TISS குவஹாத்தியைச் சேர்ந்த சயானி பாசக், TLoS குழுவினருடைய பயனுள்ள ஆலோசனைகளுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.TLoS, படங்களுக்காக ஏ மணிக்கு நன்றி தெரிவிக்கிறது!

குறிப்பு: தயவுசெய்து, இந்தத் தகவல் கட்டுரையின் நிறைவில், மாறுபட்ட விழைவு கொண்டோருக்கான ஆதரவுக் குழுக்களுடைய ஒரு பட்டியலைக் காணுங்கள்.

Illustration by Ipsa Jain. Title: Change Note from the artist: Escaping the clouds by accepting the colors of gender identity.

This piece is part of a series supported by India Alliance.

 

About the author(s)