எழுதியவர்: ரித்தி தஸ்திதர்
உள்ளடக்கத்தைப்பற்றிய எச்சரிக்கை: இந்த அறிக்கை, மாணவர்களுடைய தற்கொலைகளையும், மனச்சோர்வு போன்ற மன நலப் பிரச்னைகளையும் விவாதிக்கிறது. உங்களுக்கு ஆதரவு/நிவாரணம் தேவைப்பட்டால், நீங்கள் காணக்கூடிய வளங்களின் பட்டியலொன்று இங்கு உள்ளது.
ஓர் ஆய்வுக்காக எலிகள் கொல்லப்பட்டால், அவை ‘தியாகம் செய்யப்பட்டதாக’ ஆராய்ச்சிக்கூடக் குறிப்புகள் அதிகாரப்பூர்வமாகப் பதிவுசெய்கின்றன. அறிவியல் துறையில் ஈடுபடுகிறவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு விலகியிருக்கவேண்டியிருக்கிறது. அறிவியல் ஆய்வு அறிஞர்களைப் பேட்டியெடுக்கும்போது, இந்த விலகலானது அறிவியல் சமூகத்துக்குள்ளும் நீள்வதாகத் தெரியவருகிறது.
எட்டு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த (IIT சென்னை, IIT மும்பை, NCBS, இந்திய அறிவியல் கழகம் (IISc), கோட்பாட்டு அறிவியலுக்கான பன்னாட்டு மையம் (ICTS), கணக்கு அறிவியல் கழகம் (IMSc), விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான இந்திய அமைப்பு (IIST) மற்றும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்) 20 இப்போதைய மற்றும் முன்னாள் அறிவியல் அறிஞர்களுடன் நான் பேசினேன், அதன்மூலம் ஒரு கேள்விக்குப் பதிலளிக்க முயன்றேன்:
இன்றைக்கு இந்திய அறிவியல் அறிஞர்கள் தங்களுடைய மன நலன் பாதிக்கப்படும் ஆபத்துடன் இருப்பதற்கும், அதைச் சமாளிக்கப் போதுமான ஆதரவு இல்லாமல் இருப்பதற்கும், இதன் மிக மோசமான விளைவாக, அவர்கள் தற்கொலைக்குத் தூண்டப்படுவதற்கும் என்ன காரணம்?
இதற்கு அவர்கள் அளித்த பதில்கள், அழுத்தம் மிக்க, தனிமைப்படுத்துகிற, ஆழமான அடுக்குநிலைகளைக் கொண்ட, ஆதரவளிக்காத கல்வித்துறைச் சூழலொன்றை விவரிக்கின்றன; இது கிட்டத்தட்ட மன நலப் பிரச்னையைத் தூண்டும்விதத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. புதுமையான ஆராய்ச்சிகள் என்பவை உள்ளத்தால் சிந்திக்கவேண்டிய படைப்புச் செயல்பாடுகள். இந்தச் சூழலுக்கு இது முற்றிலும் பொருந்தவில்லை.
ஒரு நீண்ட அமைதி
மேலோட்டமாகப் பார்த்தால், தங்களுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ளத் தீர்மானிக்கும் அறிவியல் ஆய்வு அறிஞர்கள் எல்லாரும் ‘சொந்தப் பிரச்னைகளால்’ அப்படிச் செய்ததாகவும், “அதற்கும் கல்வித்துறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்றும் தோன்றும். பல ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றால், 1945ல் சி. வி. ராமனுடைய ஆய்வகத்திலிருந்த, அறிவாற்றல் மிக்க பட்டதாரி மாணவர்களில் ஒருவரான சுனந்தா பாய் தற்கொலை செய்துகொண்டதைக் காணலாம்; அங்கு தொடங்கி இன்றுவரை இந்த விஷயத்தில் தெளிவற்ற அமைதி ஒரு நீண்ட பண்பாடாகத் தொடர்கிறது.
ஐந்து மாதங்களுக்குமுன்னால், NCBSன் அறிஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். NCBS ஒரு சிறிய, உயரடுக்கைச் சேர்ந்த, ஒப்பீட்டளவில் புதிய கல்வியமைப்பு. கல்வித்துறையில் இதுபோன்ற நிகழ்வுகள் புதிதில்லை என்றாலும், இங்குள்ளதுபோன்ற இறுக்கமாகப் பின்னப்பட்ட, தாராளவாதச் சமூகமொன்றில் இது நிகழக்கூடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
நம்ரதா*வும் ராஜேஷும்* கிட்டத்தட்ட இதே நேரத்தில் NCBSல் PhD அறிஞர்களாகச் சேர்ந்தார்கள், நெருக்கமாகப் பின்னப்பட்ட நண்பர் குழுவொன்றில் இடம்பெற்றிருந்தார்கள். NCBSபோன்ற ஒரு கல்விக்கழகத்தில், “எல்லாமே உங்களுடைய PhDயைச் சுற்றிதான் நிகழ்கிறது. அழுத்தமான பணி நேரங்கள், எல்லையின்மை ஆகியவற்றால், நீங்கள் உங்களுடைய நேரத்தில் பெரும்பகுதியைக் கல்விநிறுவன வளாகத்தில் கழிக்கிறீர்கள்; உங்களுடைய நண்பர் குழு, ஆதரவு அமைப்பு ஆகியவை பெரும்பாலும் உங்கள் கல்விநிறுவன வளாகத்துக்குள்ளேயே அமைகின்றன; பல நேரங்களில் அவை உங்களுடைய சொந்த ஆய்வகத்தோழர்களுக்குள்ளாகவே அமைந்துவிடுகின்றன” என்று என்னிடம் குறிப்பிட்டார் ராஜேஷ். ஆகவே, பணியில் ஏதேனும் தவறு நிகழ்ந்துவிட்டால், உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய தடை ஏற்பட்டுவிட்டதுபோன்ற ஓர் உணர்வு உண்டாகிறது.
நம்ரதா தன்னுடைய முதல் ஆய்வகத்தில் நிலைமையைச் சமாளிக்க மிகவும் கஷ்டப்பட்டார்; ஆகவே, தன்னுடைய இரண்டாவது ஆண்டின் பாதியில் வேறு ஆய்வகத்துக்கு மாறிக்கொண்டார். இது அபூர்வமான நிகழ்வுதான்; ஆனால், யாரும் கேள்விப்படாத நிகழ்வில்லை.
பல நேரங்களில், மூத்த PIகள், ஆய்வு அறிஞர்களை “ஊக்குவிப்பதற்காக”, அவர்களை அவர்களுடைய ஆய்வகங்களில் கவனமாகக் கண்காணிப்பதுண்டு; இதை ராஜேஷ் அனுபவித்துள்ளார். மாறாக, ஆதரவான PIகள் உடல் நோய்களைப்போல் மன நோய்களையும் கவனிக்கிறார்கள், ஓய்வெடுக்கும் ஒரு மாணவரைக் குற்றவுணர்ச்சியில் தள்ளுவதில்லை என்கிறார் ராஜேஷ்.
நம்ரதாவுக்கு மன நலப் பிரச்னைகள் இருந்தன; அவரைச் சுற்றியிருந்த பலருக்கும் அதேபோன்ற மன நலப் பிரச்னைகள் இருந்தன. “அநேகமாக ஒவ்வொரு PhD மாணவருக்கும் தன்மீதே ஐயம் இருக்கும், எடுத்துக்காட்டாக இங்கு இருக்கும் அளவுக்கு எனக்குத் தகுதி உண்டா? PIகளுடைய பேச்சுகள் இதைப் பிரதிபலிப்பதுபோல் அமையும்போது, அவர்கள் ஏற்கெனவே மோத முயன்றுகொண்டிருக்கும் பிரச்னைகளை இவை இன்னும் பெரிதாக்கிவிடுகின்றன” என்கிறார் ராஜேஷ்.
நம்ரதா தன்னுடைய கல்வி நிறுவன வளாகத்துக்கு வெளியில் ஒரு சிகிச்சையாளரைச் சந்தித்துவருகிறார். அவர் மேம்பட்டுவருவதாகத் தோன்றியது. ஆனால், திடீரென்று ஒருநாள், அவர் ஆய்வகத்துக்கு வரவில்லை. அவர் தன்னுடைய தொலைபேசி அழைப்புகளுக்கும் பதிலளிக்கவில்லை. இதனால் கவலை கொண்ட ராஜேஷும் இன்னும் சிலரும், அவரைப் பார்ப்பதற்காகக் கல்வி நிறுவன வளாகத்துக்கு அருகிலிருக்கும் அவருடைய இல்லத்துக்குச் சென்றார்கள்.
அதன்பிறகு, மருத்துவர்களிடமும் காவல்துறையிடமும் பேசுவதற்கு NCBS தங்களுக்கு உதவியதாக அவர் சொன்னார். இந்தத் துயர நிகழ்வைப்பற்றிய அதிகாரப்பூர்வமான ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. “செய்யக்கூடிய மாற்றங்களைப்”பற்றி உரையாடல் நிகழ்ந்தபோதும், “ஐந்து மாதங்களுக்குப்பிறகும் எதுவும் உண்மையில் மாறவில்லை” என்று உணர்கிறார் ராஜேஷ்.
நான் NCBS-இலுள்ள தகவல் தொடர்பு அலுவலகத்தைத் தொடர்புகொண்டு இதுபற்றிக் கருத்துக் கேட்டேன். கல்வித்துறைத் தலைவர் முகுந்த் தட்டை அதற்கு இவ்வாறு பதிலளித்தார்: “எங்கள் வளாகத்தில் பரிவர்த்தன் அமைப்பின்மூலம் இலவசமான, ரகசியமான, தொழில்முறை மன நல ஆலோசனை எப்போதும் வழங்கப்பட்டுவருகிறது. இந்தத் துயர நிகழ்வுக்குப்பிறகு, இந்தச் சேவைகள் உடனே அதிகரிக்கப்பட்டன. காரணம், பல மாணவர்கள் தங்களுக்கு ஆதரவு தேவை என்று உணர்ந்தார்கள்.”
“வளாகச் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தனிப்பட்டமுறையிலும் குழு வடிவத்திலும் தொழில்முறை நிபுணர்களைக் கொண்டு, துக்கத்தைச் சமாளிப்பதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது. ஆசிரியர் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பரிவர்த்தன் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார்கள்; மன நலப் பிரச்னைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும் மாணவர்களை ஆதரிப்பதற்கான முறைகளைப்பற்றிய விரிவான குறிப்புகளை இந்நிகழ்ச்சிகள் வழங்கியுள்ளன. மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களில் சிலர், ‘வளாகம் சொல்வதைக் கேட்டல்’ என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளார்கள். இதன் நோக்கம், மன நலம் சார்ந்த மற்றும் பிற பிரச்னைகளைச் சந்தித்துவரும் வளாகச் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களையும் ஆதரிப்பதற்கான சிறந்த பழக்கவழக்கங்களைத் திரட்டுவது, வகைப்படுத்துவது, பரப்புவது” என்றார் அவர். ‘எதுவும் மாறவில்லை’ என்ற கருத்துக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இதற்கும் அழுத்தத்துக்கும் என்ன தொடர்பு?
2017ல், மன நலப் பராமரிப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. இதன்மூலம், தற்கொலையின் குற்றத்தன்மை நீக்கப்பட்டது, மிகுந்த அழுத்தத்தைச் சந்திக்காதவரை யாரும் இதை முயலமாட்டார்கள் என்ற ஊகத்தின் அடிப்படையில் இம்மாற்றம் செய்யப்பட்டது. இதுபற்றி அறிஞர்கள்மத்தியில் நடத்தப்பட்ட நேர்காணல்களை வைத்துப் பார்க்கும்போது, PIகள் அமைக்கின்ற நியாயமில்லாத எதிர்பார்ப்புகள், தோல்விபற்றிய அச்சத்தை உண்டாக்கும் ஆய்வகப் பண்பாடு, நெடுநேர உழைப்பு, தனிமை ஆகியவை மோசமான மன நலனுக்கு நேரடியாக வழிவகுப்பது தெரியவருகிறது.
IMScயைச் சேர்ந்த முன்னாள் PhD அறிஞர் ஒருவர், முதுநிலைப் பட்டப்படிப்பு மாணவர்களிடையே “ஒரு நிரந்தரமான போதாமை உணர்வு” இருப்பதாகத் தெரிவித்தார். வேறு இடங்களில் ஆராய்ச்சி செய்கிற தன்னுடைய நண்பர்களும் இதை உணர்கிறார்கள் என்றார் அவர். “தியாக அணுகுமுறையை உயர்வாகக் கருதுகிற ஒரு போக்கு இருக்கிறது. அறிவியலுக்குமுன்னால் மன நலம், உடல் நலம், சமூக வாழ்க்கை போன்றவை முக்கியத்துவமற்றவை என்று நம்பப்படுகிறது”.
பல கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த அறிஞர்களிடையே நான் பேசியபோது, எல்லார் மத்தியிலும் இந்த உணர்வைப் பார்க்கமுடிந்தது. “ஒருவர் ஆய்வகத்தில் உங்கள் முகத்தைப் போதுமான அளவு பார்க்கவில்லை என்றால், அதைப்பற்றிய விமர்சனங்களை வீசுவார், அவர்கள் வேலைசெய்கிற நேரமும் நீங்கள் வேலைசெய்கிற நேரமும் மாறுபட்டிருந்தாலும் இந்த விமர்சனம் எழுப்பப்படும்” என்றார் IIScயின் PhD அறிஞர் ஒருவர். ஒருமுறை, அவருக்குப் பல தீவிர நோய்கள் வந்து, செயல்பட இயலாமல் முடங்கிப்போனார், மருத்துவமனையில் இருந்தார். அப்போது, ஆய்வகத்திலிருந்து அவருக்குத் தொலைபேசி அழைப்புகள் வரத்தொடங்கின, அவர் மருத்துவமனையில் இருக்கிறார் என்றபோதும், “நீங்கள் உடனே இங்கு வரவேண்டும்” என்றார்கள் அவருடைய ஆய்வகத்தில் உள்ளோர்.
NCBSன் முன்னாள் MSc மாணவர் ஒருவர் இப்போது கல்வித்துறையிலிருந்து விலகிவிட்டார். “எனக்குத் தெரிந்த மற்ற பல ஆய்வகங்களைவிட, என்னுடைய ஆய்வகத்தில் நச்சுத்தன்மை குறைவாகவே இருந்தது. ஆனாலும், என்னுடைய பதற்றத்தை அது பலமடங்கு அதிகமாக்கியது” என்கிறார் இவர். “என்னுடைய PI என்னை அழைத்தாலே நான் அஞ்சத்தொடங்கிவிடுவேன். ஆய்வகத்துக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணமே துயரத்தைத் தந்தது.”
இந்தப் பிரச்னைகளாலும், மாணவர்களுக்குப் போதுமான வழிகாட்டுதலை வழங்காமலேயே “நீங்கள் பதிப்பிக்கவேண்டும், இல்லாவிட்டால் அழிந்துபோகவேண்டும்” என்று சொல்கிற பண்பாட்டாலும், காலப்போக்கில் “உங்கள் பணியின்மீது அக்கறை செலுத்துவது இயல்பில்லை” அல்லது, அதை மகிழ்ந்து அனுபவிப்பது இயல்பில்லை என்று ஆகிவிடுகிறது என்றார் IIT பாம்பே ஆசிரியர் குழு உறுப்பினர் ஒருவர். PIகள் ஒவ்வொருவரும், மன்னிப்பளிக்காத இந்த அமைப்பை வலியோடு அனுபவித்துத் தப்பிப்பிழைத்திருக்கிறார்கள், அவர்கள் மாற மறுக்கிறார்கள், பதிப்பிக்கவேண்டும் என்ற அழுத்தத்தைச் சந்திக்கிறார்கள் என்று தொடர்ந்து குறிப்பிட்டார் அவர்.
பணி-அழுத்தத்துக்கும் உளவியல் நலன் பாதிப்புக்கும், மனச்சோர்வு உண்டாவதற்கும் இடையிலுள்ள தொடர்பைப் பல ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இத்துடன், மிகுந்த பணி அழுத்தச் சூழலின்கீழ், “வீட்டு வாழ்க்கை”யுடன் தொடர்புடைய அழுத்தம் எவ்வளவு என்கிற பார்வையும் அதிகரிக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பராமரிப்பு இடைவெளி
IIScயில் ஒருங்கிணைந்த-PhD ஆய்வு அறிஞர்களில் ஒருவர் திஷா*. அவர் முதன்முதலாக இங்கு சேர்ந்தபோது, அச்சத் தாக்குதல்கள் (Panic Attacks) வரத்தொடங்கியதையும், அதற்காக வளாக ஆலோசகரைச் சென்று பார்த்ததையும் நினைவுகூர்கிறார். அந்த ஆலோசகர் (இப்போது அவர் அந்தப் பணியில் இல்லை) திஷா சொன்ன அறிகுறிகளை அலட்சியப்படுத்தினார், அவருக்கு ரத்தசோகை வந்திருக்கலாம் என்றார். திஷா “ரீவைடல் (ஓர் ஊட்டச்சத்துத் துணை உணவு) எடுத்துக்கொள்ளவேண்டும், மாதுளம்பழம் சாப்பிடவேண்டும்” என்று ஆலோசனை வழங்கினார் அவர்.
“அன்றைக்குதான் நீங்கள் சிரித்துக்கொண்டு அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தீர்கள், உங்களுக்கு எப்படி மனச்சோர்வு வந்திருக்க இயலும்?” என்று ஆசிரியர்களைக் கொண்ட குழு ஒன்று தன்னைக் கேட்டதாகவும் அவர் சொல்கிறார்.
மன நலத்தைப்பற்றிய இப்படிப்பட்ட ஒரு போதாத புரிந்துகொள்ளல் பல கல்வி நிறுவனங்களில் பரவலாகக் காணப்படுவதாகத் தோன்றுகிறது. அதேபோல், மன நலப் பிரச்னைகளைக் கையாள்வதற்கான உள் கட்டமைப்பும் இந்நிறுவனங்களில் மோசமாகவே உள்ளது.
இந்தியாவின் பெரிய அளவிலான பராமரிப்பு இடைவெளியைப்பற்றிச் சிந்திக்கும்போது, IISc இணையத்தளம் அங்குள்ள 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், முனைவர் ஆய்வுக்குப் பிந்தைய அறிஞர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தற்போது ஒரு வருகை மனநல மருத்துவரும் இரண்டு உளவியலாளர்களும் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. மன நல மருத்துவர் வாரத்துக்கு இருமுறை வருகிறார்; எல்லா நாட்களிலும் ஆலோசகர்களும் உள்ளார்கள். சோகமான விஷயம், சென்ற கோடைக்காலத்தில் IIScயில் இரண்டு PhD அறிஞர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டார்கள்.
சென்ற ஆண்டு IIT மெட்ராஸில் தன்னுடைய பொறியியலை நிறைவுசெய்த ஒரு PhD அறிஞர், 2015-16க்கிடையில் பெரிய மனச்சோர்வைச் சந்தித்தார். அவர் அங்கு இருந்த நேரத்தில், 5000க்கும் மேற்பட்ட மாணவர் கூட்டமும் ஆசிரியர்களும் ஒரே ஒரு வருகை மன நல மருத்துவரையும், வளாக-ஆலோசகர்களையும் சார்ந்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
கல்வி நிறுவனத்தின் ஆதரவைப் பெற்ற மன நல மருத்துவர் வாரத்துக்கு ஒருமுறை வருகைதந்தார்; பிரச்னைகளை முழுமையாகக் கையாள அவருக்கு நேரம் இருக்கவில்லை. “அவர்கள் பிரச்னையைத் தற்காலிகமாக அமுக்குவதில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்; நிர்வாகத்துக்கு மாணவர் எந்தத் தொந்தரவுகளையும் உண்டாக்கிவிடக்கூடாது என்று யோசிக்கிறார்கள். ஆகவே, ஒரு நம்பிக்கைக் குறைபாடு ஏற்படுகிறது.”தன்னுடைய சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்மத்தியில், “உங்களால் நிலைமையைச் சமாளிக்க இயலாவிட்டால், நீங்கள் வலுவற்றவர் என்று பொருள். நீங்கள் போதுமான அளவு ஆண்மையில்லாதவர் என்று பொருள்” என்கிற பார்வை பரவலாகிக்கொண்டிருப்பதை எண்ணி அவர் எரிச்சலடைந்தார். அவர் ஆழமான மனச்சோர்வில் விழுந்தபோது, பல நாட்களுக்கு அவரால் தன்னுடைய விடுதி அறையைவிட்டு நகர இயலவில்லை. அப்போது அவரைப் பார்ப்பதற்கு யாருமே வரவில்லை.
சமூகத்தில் இணைந்திருத்தல் ஒரு தீர்வாகுமா?
ஜனவரி 2019ல், IIT மெட்ராஸில் இருவர் தங்களுடைய வாழ்க்கைகளை முடித்துக்கொண்டார்கள். இந்த நிகழ்வுகளில் ஒன்று, ரோஷ்னியின்* விடுதியில் நடைபெற்றது. மனிதநேயத்துறையில் PhD அறிஞரான ரோஷ்னி இதுபற்றி நினைவுகூர்கிறார்: “அப்போது என் மனத்தில் ஆழமாகத் தங்கிய விஷயம், அவர் இறந்து இரண்டு முழு நாட்களாகியும், அதை யாரும் உணரவில்லை!”
“இந்த ஒட்டுமொத்தச் செயல்முறையும் [அறிவியல் பயிற்சி] எவ்வளவு தனிமையானது என்பதற்கான மிகப்பெரிய எடுத்துக்காட்டு இது… தனிமையாக இருப்பது எந்த அளவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இது. ஒவ்வொருவரும் கண்ட நேரத்தில் பணிபுரிகிறார்கள், வெவ்வேறு பணி நேரத்தைக் கொண்டிருக்கிறார்கள், ஆகவே, பல நேரங்களில் நீங்கள் யாரையும் காண்பதில்லை.”
IIT மெட்ராஸ் நிர்வாகத்தின் பார்வையில், அவர்கள் இந்தப் பிரச்னையைக் கையாள முயன்றுகொண்டிருக்கிறார்கள். IITக்கு வருகிற மாணவர்களுடைய தன்மை (பெரிய சாதனைகளைப் புரிந்த, உள்முகச்சிந்தனை கொண்ட மாணவர்கள்) மற்றும் வீட்டிலுள்ளோர் அவர்கள்மீது திணிக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் ஆகிய இரண்டிலும் பிரச்னை உள்ளது என்று நம்புகிறார் மாணவர்கள் தலைவர் அல்லது DOSTஆன எம். எஸ். சிவக்குமார்.
“நாங்கள் பலவழிகளில் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முயல்கிறோம்” என்று என்னிடம் தொலைபேசி அழைப்பின்மூலம் தெரிவித்தார் அவர். ஆலோசகர்கள், சந்திப்புப் பதிவின்மூலமும் அழைப்பின்மூலமும் வருகைதருகிற ஒரு மன நல மருத்துவர் உள்ளிட்ட ஒரு “நலக் குழு”வும் அமைக்கப்பட்டுள்ளது. சில மூத்த மாணவர்கள், ஆசிரியர்கள், மித்ர் என்ற முயற்சியின்வழியாகப் பிறருக்கு ஆலோசனை வழங்கத் தன்னார்வத்துடன் முன்வருகிறார்கள்.
“ஆனால், நாங்கள் சந்திக்கும் பிரச்னை, தகவலைப் பெறுவதுதான். அதாவது, யாருக்குப் பிரச்னை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது சிரமமாக உள்ளது” என்று வருத்தத்துடன் சொன்னார் அவர்.
மாணவர் தலைவர் இதற்கான தலையீடுகளை நாடுகிற நேரத்தில், இன்னும் இயற்கையான சமூகப் பிணைப்புகள் தேவை என்று உணர்கிறார் ரோஷ்னி. சமூகத்துடன் இணைப்பின்றி வாழ்வதற்கும் மனச்சோர்வுக்கும் உள்ள இணைப்பை அண்மைக்கால ஆய்வுகள் வலுப்படுத்துகின்றன.
IIT-Mல் தற்போது PhD அறிஞராக உள்ளவரும், முன்பு மித்ர்-ன் ஒரு பகுதியாக இருந்தவருமான ஒருவர், இந்த முயற்சி மாணவர்களுக்கு உதவியிருக்கிற அதே நேரத்தில், அறிவியல்துறைகளில் இருக்கும் தனிமை ஆழமானது என்கிறார், அந்தத் தனிமை செயல்திறனுக்குச் சமமாகக் கருதப்படுவதாகவும் இவர் சொல்கிறார். இத்துடன் ஒப்பிடும்போது, மனிதநேயத்துறைகளில் சமூக மற்றும் மன நலப் பிரச்னைகளுடன் அதிக உரையாடல், ஊடாடல் இருக்கும் என்கிறார்.
யாரும் பொறுப்பேற்கவோ உரிமைகளை வழங்கவோ முன்வருவதில்லை
பல கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த அறிஞர்கள் கண்டிப்பான அடுக்குநிலையைப்பற்றிப் பேசினார்கள்; PIகள் அல்லது ஆசிரியர்களுடைய துன்புறுத்தல், கொடுமைப்படுத்தல், அறிவுக்குப் பொருந்தாத எதிர்பார்ப்புகள் அல்லது நச்சுத்தன்மை மிகுந்த பழக்கவழக்கங்களுக்கு யாரும் பொறுப்பேற்பதில்லை என்றார்கள்.
“PI யாருக்கும் பதில்சொல்லவேண்டியதில்லை” என்கிறார் 2016ல் NCBSலிருந்து MSc பட்டம் பெற்ற சகினா*. “உண்மையில், PIக்கு மேலே துறைத்தலைவரும் நன்னெறிக் குழுவும் உள்ளார்கள். ஆனால், அவர்கள் எல்லாரும் நண்பர்கள்.”
சாதி பார்த்தல், பாலினம் சார்ந்த துன்புறுத்தல் மற்றும் மதம் சார்ந்த பாரபட்சம் ஆகியவற்றுக்கெதிரான புகார்கள் வரும்போது, கல்வி நிறுவனங்கள் யாரையும் தண்டிப்பதில்லை, குற்றம்சாட்டப்பட்டோரை அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விலக்கிவிடுகின்றன. இது ஓரளவு எதிர்பார்க்கக்கூடிய பழக்கவழக்கம்தான்.
ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஜி. புல்லா பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் படித்த அலிஜா* என்னுடன் பேசினார். கிட்டத்தட்டப் பத்தாண்டுகளுக்குமுன்னால், பர்தா அணிந்த ஒரு முஸ்லிம் பெண்ணாக இவர் கல்லூரிக்குச் சென்றதால், இவருடைய மதம் எல்லாருக்கும் தெளிவாகத் தெரிந்தது. அதனால் தான் சந்தித்த பாலினம் சார்ந்த இஸ்லாமிய அச்சத்தைப்பற்றி அவர் எனக்குச் சொன்னார். சிலர் அவரிடம் “எப்படியும் நீங்கள் சவுதியிலிருந்து ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்கள், பிறகு ஏன் இங்கு படிக்கவந்தீர்கள்?” என்று கேட்டார்கள், இன்னும் சிலர் “மோசமான முஸ்லீம் பெண்களை”ப்பற்றி அவரிடம் கருத்துத் தெரிவித்தார்கள், அவர் ஒரு தொழில்நுட்ப அமைப்பில் சேர்ந்தபோது, சிலர் அவரைத் துன்புறுத்தி அங்கிருந்து வெளியேற்றினார்கள். இந்த அனுபவங்களெல்லாம் அவரை ஒரு நீடித்த அதிர்ச்சிக்குள் தள்ளின.
இந்தக் கட்டுரை எழுதப்படும் நேரத்திலும், சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த பல அறிஞர்கள், மாணவர்கள் துன்புறுத்தப்படுவது தொடர்கிறது. சென்ற ஆண்டில், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு காஷ்மீர் முஸ்லீம் PhD அறிஞர் தன்னுடைய PIயிடம் துன்புறுத்தலைச் சந்தித்துள்ளார். அந்தப் PI அவருக்கு எந்த வழிகாட்டலையும் வழங்கவில்லை, மாறாக, அவர் PIயின் அறைக்குள் நுழைந்தாலே அவரைத் திட்டத்தொடங்கினார். இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு HODயும் உதவவில்லை.
“பிற காஷ்மீரி நண்பர்களுடன் சேர்ந்து VCயை அணுகலாம் என்று அவர் திட்டமிட்டார், ஆனால், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும் இதில் சேர்த்துக்கொள்ளுமாறு நான் அவருக்கு ஆலோசனை சொன்னேன்” என்கிறார் காஷ்மீரைச் சேர்ந்த அவருடைய இன்னொரு சக அறிஞர். “பிறருக்குப் போராடும் சுதந்தரம் இருக்கலாம். ஆனால், நாங்கள் அதை எங்களுக்குள் வைத்துக்கொள்ளவேண்டும்.”
IIScயிலும், சிறுபான்மையினர் துன்புறுத்தப்படும் நிகழ்வுகள் நடந்துவருகின்றன. சமீபத்தில், தலித் ஆய்வு அறிஞர்களுக்கு வழிகாட்டிகள் வழங்கப்படவில்லை; சில நேரங்களில், அவர்கள் ஆய்வகத்துக்குள் நுழையாதபடி தடுக்கப்பட்டுள்ளார்கள். இதுபற்றிப் பேசுவதற்காக நான் அறிஞர்களைத் தொடர்புகொண்டபோது, அவர்கள் கருத்துச் சொல்ல மறுத்துவிட்டார்கள். அதற்கு அவர்கள் குறிப்பிட்ட காரணம், மாணவர்களுக்கான ஒழுக்க நெறிமுறைகளில் சமீபத்தில் ஒரு புதிய நெறிமுறை சேர்க்கப்பட்டுள்ளது, அதன்மூலம், அவர்கள் ஊடகங்களுடன் பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் காரணத்தாலும், சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் அமைப்பு அங்கு செயலில் இல்லாததாலும், உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் கல்வித்துறையில் பெரும்பான்மையினராக இருக்கும் வழக்கம் தொடர்கிறது.
IIT மெட்ராஸில், 2018ல் தொடங்கி,‘கண்காணிப்பு’ப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அறிவிப்பில்லாமல் மாணவர்களுடைய அறைகளைத் தேடிவருகிறார்கள். இதனிடையே, தன்னுடைய பெயரை வெளியிட விரும்பாத ஒரு PhD அறிஞர், சமீபத்தில் ஊழியர்கள்/ஆசிரியர்களுக்கிடையிலான மின்னஞ்சல் திரியொன்று வெளியில் கசிந்ததாகவும், அதில், மாணவர்களுக்கு அவர்களுடைய அறைகளில் தனியுரிமையே இருக்கக்கூடாது என்று தடைசெய்கிற நோக்கம் வெளிப்பட்டதாகவும் குறிப்பிட்டார். அந்த அளவு தனியுரிமை தேவைப்படுகிறவர்கள் “கழிப்பறைக்குச் செல்லவேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாம். மாணவர்களுடைய அறைகளுக்கு இரவு 9மணிவரை மாணவிகள் செல்ல அனுமதி உண்டு. ஆனால், இங்கு நிகழும் தேடல்களை வைத்துப் பார்த்தால், ஒரு விடுதியின் பதிவேட்டில் ஒரு மாணவியுடைய பெயர் தோன்றினால், அங்குள்ள அறைகள் தலைகீழாகப் புரட்டப்படுவதாகத் தோன்றுகிறது.
கொதிகெண்டிகள், ஆணுறைகள், சிகரெட் துண்டுகள் போன்ற பொருட்களுக்குத் தண்டத்தொகை விதிக்கப்படுகிறது. ஓர் வசிப்பிட அமைப்பில் வாழவேண்டிய வயதுவந்தவர்கள் மத்தியில் இப்படியொரு வெறிபிடித்த மனப்போக்கு ஏன் பின்பற்றப்படுகிறது என்று யாருக்கும் தெரியாத ரகசியம். “என்னுடைய வகுப்புத்தோழர்கள் சிலருக்குக் குழந்தைகள் இருக்கிறார்கள்!” என்றார் அந்த அறிஞர். “நீங்கள் ஆசிரியர்களிடம் இப்படி நடந்துகொள்ளமாட்டீர்கள்தானே? எங்களிடம்மட்டும் ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள்? ஏன் இந்தப் போலித்தனம்? எங்களுக்கு உரிமைகள் ஏதும் கிடையாதா?”
‘எனக்கு அதிர்ச்சியளித்த விஷயம், தனியுரிமைக்கான கோரிக்கை…’ – IIT மெட்ராஸில் மாணவர் விவகாரக் குழு உறுப்பினர்களுக்கிடையிலான, கசியவிடப்பட்ட மின்னஞ்சல் திரியின் ஒரு பகுதி.
பிறகென்ன?
நான் பேட்டியெடுத்த பல ஆய்வு அறிஞர்களில் ஒருவர், “பாடத்திட்டத்துக்கு வெளியிலான ஒரு விளையாட்டை வளாகத்துக்குள் சேர்ப்பதாலோ, வாரத்துக்கு ஒருமுறை ஓர் ஆலோசகரை அழைத்துவருவதாலோமட்டும் மன நலம் மேம்பட்டுவிடாது” என்றார். தூய அறிவியலானது எப்படித் தோன்றவேண்டும் என்கிற நம்முடைய பார்வையையே மாற்றவேண்டும்.
முதுநிலை மற்றும் ஒருங்கிணைந்த-PhD அறிஞர்களுக்கு உதவித்தொகைகளை நிறுத்துவதுபற்றிய ஒரு விவாதம் நடந்துகொண்டிருப்பதாக IITகள், IIScயிலுள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் நடப்பதுபோல், அதிகரித்துவரும் தனியார்மயமாக்கலைத் தழுவிக்கொள்வது, உயர்ந்துவரும் மாணவர் கடன் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலம் போன்றவை, இந்திய அறிவியல் அறிஞர்களுடைய ஏற்கெனவே மோசமான நிலையிலுள்ள மன நலனை மேம்படுத்தப்போவதில்லை.
கல்வித்துறையே உயர்வர்க்கத்தினரிடமிருந்து பண்புகளைப் பெற்றுக்கொள்கிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் ஆந்திரப்பிரதேசத்திலிருக்கும் குறைந்த வருவாய்க் குடும்பமொன்றிலிருந்து IISTக்கு வந்து முதுநிலைப் பட்டப்படிப்பு படிக்கிறீர்கள் என்றால், உங்களுடைய படிப்பு இலவசமாக இருப்பதற்கும், பட்டம் பெற்றதும் ISROவில் பணிக்குச் சேரவேண்டும் என்கிற உங்கள் கனவு நனவாவதற்கும், நீங்கள் ஒரு குறிப்பிட்ட CGPAவுக்குமேல் இருக்கவேண்டும். ஒருவேளை, நீங்கள் இந்த நிலையிலிருந்து கீழே இறங்கிவிட்டால், ஒரு செமஸ்டருக்கு ரூ. 48,000வரை செலுத்தவேண்டும். PhD அறிஞர் என்றமுறையில், 32,000 தொடக்க உதவித்தொகையில் நீங்கள் வாழ்க்கை நடத்தலாம். ஆனால், நாட்கள் செல்லச்செல்ல, நிலைமை கடினமாகிறது. நீங்கள் உங்கள் குடும்பத்தை ஆதரிக்கவேண்டியிருந்தால், அல்லது, வீட்டுக்குப் பணம் அனுப்பவேண்டியிருந்தால், உங்களை என்ன செய்வது என்பதே கல்வி அமைப்புக்குத் தெரியாது.
மன நலன் என்பது ஒரு வெற்றிடத்தில் இருப்பதில்லை. தனி நபர்கள் பணி அழுத்தத்துக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதைப் பல காரணிகள் தீர்மானிக்கின்றன. எடுத்துக்காட்டாக, மரபியல், சமூகப் பொருளாதார நிலைகள் மற்றும் சமூக உறவுகள். அதேசமயம், கல்வித்துறை கட்டமைக்கப்பட்டிருக்கும் அமைப்பைத் தீவிரமாக மாற்றாமல், தனிமையான, உயர் அழுத்தப் பணிச் சூழல்கள், மோசமான மன நிலை போன்ற உளவியல் சமூகவியல் காரணிகளுக்கிடையிலான உறவை அலட்சியப்படுத்துவது குறைந்தபட்சம் தவறான வழிநடத்தலாகும், இன்னும் மோசமான சூழ்நிலையில், அது இந்திய அறிவியல்துறையில் நிகழும் தற்கொலை மரணங்களைத் ‘தடுமாற்ற’ங்களாகக் காணவேண்டும் என்று வேண்டுமென்றே வலியுறுத்துதலாகும்.
“பட்டப்படிப்பு ஆராய்ச்சிக்கான ஊக்கத்தொகைகளைக் கொண்ட இந்த ஒட்டுமொத்த அமைப்பும், இதிலிருக்கும் அதிகார அடுக்குகளும் வேறுவிதமாக இருக்கவேண்டும்” என்று ஒரு பட்டதாரி மாணவர் என்னிடம் சொன்னார். “கல்வித்துறை இதேபோல் கட்டமைக்கப்படுகிறவரையில், நம்மால் மன நலனைக் கையாள இயலாது.”
ஐந்து மாதங்களுக்குமுன் NCBSல் நிகழ்ந்த நம்ரதாவின் மரணம், செய்தியாகவில்லை. அவருக்கு நெருக்கமாக இல்லாத சக மாணவர்கள், “இங்குள்ள சூழல் குறைந்தபட்சம் IIScயைவிட மேம்பட்டுள்ளது” என்றார்கள்.
நம்ரதா ஒரு புள்ளிவிவரமாக இல்லை. இதுபோன்ற ஒரு கட்டுரையில் அதை மறப்பது எளிது. “நம்ரதாவைப்பற்றி, அவருடைய மரணத்துடன் சம்பந்தப்படாத எதையாவது சொல்லுங்கள்.” அவருடைய நண்பர், சக மாணவரான ராஜேஷுக்கு நான் இப்படி உரைச்செய்தி அனுப்பினேன். வேலையில் மூழ்கியிருந்த அவர், பல மணி நேரம் கழித்துதான் பதில் அனுப்பினார்.
“நான் சந்தித்த மனிதர்களில் மிகவும் கருணையானவர்களில் அவர் ஒருவர். அவர் எப்போதும் தன்னைவிடப் பிறரை முக்கியமாகக் கருதுகிறவர். சில நேரங்களில் அது பிழையாகவே அமைந்தாலும் சரி. அவர் கலைத்துறையிலும் நல்ல ஆர்வம் காட்டினார், குறிப்பாக, காகிதங்களால் செய்கிற Quillingல். அவர் உயிர்த் தகவலியல் (bioinformatics) துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆகவே, நிரலெழுதுதல் (coding) மற்றும் உயிர்த் தகவலியல் மென்பொருள்களைப்பற்றி எங்களுக்கு என்ன கேள்விகள் இருந்தாலும் அவரிடம்தான் செல்வோம். அவருக்குப் பழ இனிப்புகள் பிடிக்காது. சுத்தமாகப் பிடிக்காது. ப்ளூபெர்ரி டேனிஷ், மாம்பழ யோகர்ட், சீதாப்பழ ஐஸ் க்ரீம் போன்றவற்றை அவர் விரும்பியதில்லை. அவற்றைச் சும்மா சுவை பார்க்கக்கூட அவர் தயாராக இல்லை. மிக முக்கியமாக, ஒவ்வொருவரும் நம்பிக்கைவைக்கக்கூடிய ஒருவராக அவர் இருந்தார்.”

ஆசிரியர் குறிப்பு: ரித்தி தஸ்திதர், தில்லியைச் சேர்ந்த கவிஞர், இதழாளர். தில்லி அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் MA பாலின ஆய்வுகள் பயின்றுவரும் முதுகலைப் பட்டப்படிப்பு மாணவர் அவர். அவருடைய படைப்புகளை, அவருடைய பூனைகளை, அல்லது, பாலினக் கருத்தாக்கத்தின்மீதான அவருடைய தீவிர அன்பை மேலும் காண்பதற்கு, @gaachburi -ல் நீங்கள் அவரைப் பின்தொடரலாம்.
பதிப்பாசிரியர் குறிப்பு: *தகவல் தந்தவர்களைப் பாதுகாப்பதற்காக, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன (துயரத்தில் உள்ளவர்கள், அல்லது, தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு ஆலோசனை உதவி தேவைப்பட்டால் ஆரோக்கிய சஹாயவாணி 104ஐ அழைக்கலாம்). உதவித் தொலைபேசி எண்கள் இங்கும் உள்ளன.
This piece is part of a series supported by India Alliance.